சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி மாத்தறை பகுதியில் 1.5 ஏக்கர் காணியை கொள்வனவு செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ செலுத்தியிருந்த பிணைப் பணத்தை பறிமுதல் செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று (18) உத்தரவிட்டது.
பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் (FCID) தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, மாத்தறை எளியகந்த வீதி, பிரவுன்ஹில் பகுதியில் அமைந்துள்ள சொத்து ஒன்றுடன் தொடர்புடையதாகும். இந்த வழக்கு மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான பசில் ராஜபக்ஷ, நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவ அறிக்கையொன்றைக்கூட சமர்ப்பிக்காமல் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
மேலும், பசில் ராஜபக்ஷவின் பிணையாளர்களாக கையொப்பமிட்ட மூவருக்கும் நீதவான் அபராதம் விதித்ததுடன், அந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் அவர்களை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.
பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த கைது உத்தரவு 2026 ஒக்டோபர் 27ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் முதலாவது மற்றும் இரண்டாவது சந்தேகநபர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். முறைப்பாட்டாளர் தரப்பில் FCID அதிகாரிகள் ஆஜராகியதுடன், ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு பிரதிவாதி தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தியது.




