உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீடிப்பதற்காக இலங்கை முன்மொழிந்துள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் மார்கரெட் சாட்டர்த்வேயிட் கவலை வெளியிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 7ஆம் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிய உத்தியோகபூர்வ கடிதத்தில், முன்மொழியப்பட்ட திருத்தம் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமை தொடர்பான சர்வதேச மனித உரிமைத் தரங்களுடன் ஒத்துப்போகாமல் இருக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்மொழியப்பட்ட திருத்தத்தின் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 63 இலிருந்து 65 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த மாற்றம் எதிர்காலத்தில் நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு மாத்திரமன்றி, தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளுக்கும் பொருந்தும் வகையில் முன்மொழியப்பட்டிருப்பது குறித்து விசேட அறிக்கையாளர் கவனம் செலுத்தியுள்ளார்.
நீதிபதிகளின் அறிவு மற்றும் அனுபவத்தைப் பாதுகாப்பது போன்ற காரணங்களின் அடிப்படையில் ஓய்வு வயதை நீடிப்பதை நியாயப்படுத்த முடியும் என்றாலும், நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கத்துறையின் தலையீடுகளைத் தடுப்பதற்கான வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரிவான கலந்துரையாடலும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
தெளிவான இடைக்கால ஏற்பாடுகள் இல்லாத நிலையில், இந்தத் திருத்தம் நியாயமான சட்ட விதியை உருவாக்குவதற்குப் பதிலாக குறிப்பிட்ட தனிநபர் அல்லது நிறுவன நோக்கங்களுக்காக நீதித்துறையின் அமைப்பை மாற்றுவதற்கான முயற்சியாக பொதுமக்களால் கருதப்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்தத் திருத்தத்தால் பயனடையும் நீதிபதிகளே எதிர்காலத்தில் அதன் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மை தொடர்பில் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அது நலன் முரண்பாட்டை ஏற்படுத்தி நீதித்துறையின் நடுநிலைமை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, போதிய கலந்துரையாடல்கள் இன்றி அவசரமாக மேற்கொள்ளப்படும் மாற்றங்களைத் தவிர்த்து, நீதிபதிகள், சட்டத்தரணிகள் சங்கம், சிவில் சமூகம் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்களைப் பெற்று வெளிப்படையானதும் விரிவானதுமான சீர்திருத்த செயல்முறையை முன்னெடுக்குமாறு அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு இந்தத் திருத்தத்தைப் பொருந்தச் செய்வதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.




