கொஹுவல பாலத்தின் கீழ் மோட்டார் சைக்கிளொன்றில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்படுவதாகத் தோன்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருவதையடுத்து, பொய்யான தகவல்கள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
பொய்யான மற்றும் தவறான தகவல்கள், அத்துடன் வன்முறையைத் தூண்டக்கூடிய உள்ளடக்கங்களைப் பரப்புவதன் மூலம் சமூகத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும், அவ்வாறான செயற்பாடுகள் இலங்கை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கக்கூடும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான உள்ளடக்கங்களைப் பகிர்வதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு சமூக ஊடகப் பயனர்களிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, “சரிபார்க்கவும், உறுதிப்படுத்தவும், பொறுப்புடன் பகிரவும்” (Check, Verify and Share Responsibly) என்ற மூன்று அடிப்படை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகவலைப் பகிர்வதற்கு முன்னர் அதன் மூல ஆதாரம் உண்மையானதா என்பதைச் சரிபார்த்து, நம்பகமான மற்றும் உத்தியோகபூர்வ செய்தி மூலங்கள் ஊடாக தகவலை உறுதிப்படுத்துமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொது அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பொய்யான செய்திகளைப் பரப்பும் நபர்களுக்கு தண்டனைச் சட்டக்கோவை மற்றும் கணினி குற்றங்கள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் பொலிஸார் மேலும் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக, அச்சம் அல்லது பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




