நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கிய கலந்துரையாடலுக்கான வாய்ப்பின் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியது. இதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேச சட்ட அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இது தொடர்பான 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்கனவே ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.
நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதும், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
அதற்கமைய, நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து ஜனாதிபதி மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான இந்த கலந்துரையாடல் இடம்பெறுகிறது.




