நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்காக அரசாங்கம் கொண்டுவரத் தயாராகும் புதிய சட்டமூலத்திற்கு எதிராக அடுத்த வாரம் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப் போவதாக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (12) முற்பகல் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தால் நாட்டின் நீதித்துறை எதிர்கொண்டுள்ள வழக்கு தாமதங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது என்பதை உயர் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளில் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் சுமார் ஒரு சதவீதம் மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் நீதித்துறை மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட பொதுநலவாய நாடுகளுக்கு இடையில் நீண்டகால உறவு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவித்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சம்பந்தப்பட்ட அனைத்து தீர்மானங்களும் எடுக்கப்பட்ட பின்னர் இவ்வாறான கலந்துரையாடல்களை நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை என தெரிவித்தார்.




