ராஜபக்ச குடும்பம் வழக்குகளின் அடையாளமாக மாறியுள்ளதாகவும், அந்த குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த அவர், உலகின் வேறு எந்த அரசியல் குடும்பத்திலும் இவ்வாறான நிலை காணப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
“ராஜபக்ச என்பது உலகில் மிகவும் விசேடமான குடும்பம். நாமல் ராஜபக்சவுக்கு வழக்குகள் உள்ளன. அவரது தந்தைக்கு வழக்குகள் உள்ளன. தாயார், மூத்த சகோதரர், இளைய சகோதரர், மாமா, உறவினர்கள் மற்றும் பாட்டி வரையிலும் வழக்குகள் உள்ளன. முழு குடும்பமும் வழக்குகளால் சூழப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
மேலும், ஒரு குடும்பம் அரசியலில் இவ்வாறான நிலைக்கு தள்ளப்படாமல் இருப்பது எப்படி என்பது குறித்து உலகம் முழுவதும் உள்ள பாடசாலைகளில் கற்பிப்பதற்கான உதாரணமாக இந்த குடும்பத்தை பயன்படுத்த முடியும் என்றும் நஜித் இந்திக குறிப்பிட்டார்.




