கடவத்தை பகுதியில் வயல்வெளியில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த 17 வயது இளைஞர் ஒருவர் மீது மூவர் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தியதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கழுத்துப் பகுதியில் காயமடைந்த இளைஞர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பொலிஸாரின் தகவலின்படி, தனது வீட்டின் பின்புற வயல்வெளியில் பட்டம் விட்டுக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் மற்றும் அவருடன் வந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கான காரணம் காதல் தொடர்பான பிரச்சினை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முக்கிய சந்தேகநபரை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், மற்ற இருவரும் பின்னர் கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் இன்று (31) மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




