உலகளாவிய ரீதியில் மாற்றமான காலநிலை நிலைமைகளை ஏற்படுத்தும் எல்-நீனோ நிகழ்வு இம்முறை கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதனை எதிர்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.
பசுபிக் பெருங்கடல் பகுதியில் ஆரம்பமாகியுள்ள இந்த எல்-நீனோ நிகழ்வு தற்போது பலவீனமான நிலையில் காணப்பட்டாலும், எதிர்காலத்தில் அது வலுப்பெறக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தற்போது நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வறட்சியான காலநிலை நிலவி வருகின்றது.
மேலும், சில பகுதிகளில் நீர்நிலைகள் வற்றிப்போயுள்ளதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இம்முறை பெரும் பருவ நெல் செய்கையை ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நிலவும் வறட்சியான காலநிலை நீங்கும் வரை நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எல்-நீனோ காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கான திட்டங்களை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தற்போது தயாரித்து வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.
அவர் அரச நிதிக் குழுவின் முன்னிலையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனை தெரிவித்தார்.
எனினும், பாராளுமன்றத்தினால் சட்டரீதியாக நிறுவப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ நிதியம் இதுவரை முறையாக செயற்படுத்தப்படவில்லை என அரச நிதிக் குழுவில் தெரியவந்துள்ளது.




