குடும்பத் தகராறு காரணமாக எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் உயர் மின்னழுத்த மின் பரிமாற்றக் கோபுரத்தில் ஏறிய நபருக்கு, இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நட்டத்தை இழப்பீடாக செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் ஜூலை 21 ஆம் திகதி கம்புறுபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் உயர் மின்னழுத்த மின் பரிமாற்றக் கட்டமைப்புக்குச் சொந்தமான கோபுரத்தில் ஏறியுள்ளார்.
இதன் காரணமாக திஹகொட, கம்புறுபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தெவியந்தர, மாவரல மற்றும் தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமான காலம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பின்னர் பொலிஸார் குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்களை சம்பவ இடத்திற்கு அழைத்ததையடுத்து, அவர் கோபுரத்திலிருந்து கீழிறங்கியுள்ளார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, 2026 ஜூலை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ஜூலை 24 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பவத்தினால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி இழப்பை கணக்கிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கம்புறுபிட்டிய பொலிஸாருக்கு மாத்தறை பிரதான நீதவான் உத்தரவிட்டார்.
பின்னர் ஜூலை 28 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இரண்டு மணித்தியாலங்களுக்கு அதிகமான மின்சாரத் துண்டிப்பினால் இலங்கை மின்சார சபைக்கு ரூபாய் 201,059.90 நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
விசாரணையின் போது சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, ஏற்பட்ட நட்டத்திற்கான இழப்பீட்டை இலங்கை மின்சார சபைக்கு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு 2026 நவம்பர் 03 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




