முக்கியச் செய்தி
வெள்ளி, 31 ஜூலை, 2026
··
உள்ளூர்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் மரணம்: பாதுகாப்பு உத்தியோகத்தர் சாட்சி

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் திடீர் மரணம் தொடர்பில் இடம்பெறும் நீதவான் விசாரணையில், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் (697) சுசந்த கடுவெல முக்கி…

By Site Administrator··1 நிமிட வாசிப்பு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் மரணம்: பாதுகாப்பு உத்தியோகத்தர் சாட்சி

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் திடீர் மரணம் தொடர்பில் இடம்பெறும் நீதவான் விசாரணையில், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் (697) சுசந்த கடுவெல முக்கிய சாட்சியமொன்றை வழங்கியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற தினம் காலை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தனது கடமை துப்பாக்கியான 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி மற்றும் அதற்கான ரவைகளை தன்னிடம் கேட்டதாக சார்ஜன்ட் தெரிவித்துள்ளார்.

அந்த துப்பாக்கி “புதியதா அல்லது பழையதா என்பதை பரிசோதிக்க வேண்டும்” எனக் கூறி அவர் அதனை கோரியதாகவும், இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு தனது கடமை ஆயுதத்தை முன்னாள் பொலிஸ் மா அதிபர் கோரியதில்லை எனவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கி மற்றும் ரவைகளை வழங்கிய பின்னர், தனக்கு ஒரு தண்ணீர் போத்தல் கொண்டு வருமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் கூறியதாகவும், அதற்காக வீட்டிற்குள் சென்றபோது துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் சார்ஜன்ட் சாட்சியமளித்துள்ளார்.

வழங்கப்பட்ட சாட்சிகளை கருத்தில் கொண்ட கடுவெல நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, சம்பவத்துடன் தொடர்புடைய 9 மில்லிமீற்றர் கைத்துப்பாக்கி, பயன்படுத்தப்பட்ட ரவைக் கூடுகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அறிவியல் பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்புமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை முன்னெடுக்கும் வகையில், பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பேரில் விசாரணைகள் மாலபே பொலிஸாரிடமிருந்து மேற்கு மாகாண தெற்கு விசேட விசாரணைப் பிரிவுக்கு (SIU) மாற்றப்பட்டுள்ளன.

மாலபே, தலஹேன, பராக்கிரம வீதியில் அமைந்துள்ள வீட்டுத் தோட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 63 வயதான முன்னாள் பொலிஸ் மா அதிபர், முல்லேரியா கொழும்பு கிழக்கு அடிப்படை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் போதே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்