கேகாலை – ரந்தெனிய பகுதியில் அமைந்திருந்ததும், முன்னர் ‘வரகாகொட யானை’ என அழைக்கப்பட்ட ‘ரந்தெனிய பண்டார’ என்ற பிரபல யானை வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளது.
குருநாகல் – மெல்சிரிபுர வீதியின் ஓமரகொல்ல பகுதியில் வீதியைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாகவும் பொறுப்பற்ற முறையிலும் பயணித்த டிப்பர் லொறி யானை மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் யானை பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு திணைக்கள கால்நடை வைத்தியர்கள் உடனடியாக முதற்கட்ட தீவிர சிகிச்சைகளை வழங்கினர்.
கேகாலை ரந்தெனிய பகுதியில் இருந்து மனம்பிட்டிய தேவாலயத்தின் வருடாந்த பெரஹெராவிற்காக யானை அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதை ஏற்றிச் சென்ற லொறியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக யானையை வீதியோரத்தில் இறக்கியிருந்தபோது, தம்புள்ளையிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த மணல் ஏற்றிய டிப்பர் வாகனம் மோதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மோதலின் தாக்கத்தால் யானை சுமார் 50 மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டதாகவும், விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் மிகவும் பிரபலமான இந்த யானை காயமடைந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, யானை விரைவில் குணமடைய வேண்டும் என்ற பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் சாரதிகள் அதிக கவனத்துடனும் பொறுப்புடனும் வாகனங்களை இயக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.




