சீன பிரஜைகளான சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் போது மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் அவர்களை ஆஜர்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கு நீதவான் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சட்டவிரோதமாக 16 வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சீன பிரஜை ஒருவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபருக்கு குற்றச்சாட்டுகளை விளக்குவதற்கு பொருத்தமான மொழிபெயர்ப்பாளரை பொலிஸார் அழைத்து வராததால் நீதிமன்ற நடவடிக்கைகளில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸாரிடம் கடும் விளக்கம் கோரிய நீதவான், வெளிநாட்டு சந்தேகநபர்களை கைது செய்து அவர்களுக்கு உரிய விளக்கமின்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
பின்னர் நீதிமன்றத்தில் இருந்த மற்றொரு சீன பிரஜை மொழிபெயர்ப்பாளராக உதவ முன்வந்ததுடன், குற்றச்சாட்டு விளக்கப்பட்ட பின்னர் சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, சந்தேகநபருக்கு 2,000 ரூபா அபராதம் விதிக்க நீதவான் உத்தரவிட்டார்.




