நக்கிள்ஸ் ஜோடி அருவியில் குளிக்கச் சென்றபோது செல்ஃபி புகைப்படம் எடுக்க முயன்ற 14 வயதுடைய இரண்டு பாடசாலை மாணவர்கள் அருவியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர்.
பன்வில பொலிஸார் தெரிவிப்பதாவது, நக்கிள்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் 9ஆம் ஆண்டு கல்வி பயிலும் ஐந்து மாணவர்கள் கடந்த 22ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் அருவிக்கு சென்றுள்ளனர். புகைப்படம் எடுக்க முயன்றபோது இரண்டு மாணவர்கள் அருவியில் இருந்து தவறி விழுந்துள்ளனர்.
ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றைய மாணவர் மடோல்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் தவலந்தென்ன, நக்கிள்ஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த பி. சல்ஜித் மற்றும் கே. டிலோன் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பன்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




