ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பு பகுதியில் இன்று (23) காலை பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இன்று காலை 6.10 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், அலுவலக ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் பயணிக்கும் பரபரப்பான நேரத்தில் இடம்பெற்றுள்ளது.
மரம் வீதியின் குறுக்கே விழுந்ததால் இருபுறங்களிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், பயணிகள் பலர் சிரமங்களை எதிர்கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் அறிந்தவுடன், பிரதேச மக்கள், தோட்டத் தொழிலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் மற்றும் ஹட்டன் பொலிஸார் இணைந்து கடும் முயற்சியுடன் மரத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
சுமார் ஒரு மணித்தியால நடவடிக்கையின் பின்னர் வீதித் தடைகள் முழுமையாக அகற்றப்பட்டு போக்குவரத்து வழமைக்கு கொண்டு வரப்பட்டது.




