திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் வளாகத்தில் புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை பிரதேச தொல்பொருளியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தூபி பாதுகாப்பு நடவடிக்கைக்கான ஆரம்ப நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் W.G.M. ஹேமந்த குமார, திருகோணமலை பிரதேச தொல்பொருளியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சுரங்க பெரேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதியில் புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் HCT/Writ/590/2019 வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவின்படி, கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், நீதிமன்ற உத்தரவை மீறி, பழமையான பிள்ளையார் ஆலய இடிபாடுகள் காணப்படும் பகுதியில் பௌத்த விகாரை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் மத, வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படும் கன்னியா பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் சமூக அமைப்புகளும் உள்ளூர் மக்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
கன்னியாவின் தொல்லியல் மற்றும் வரலாற்று அடையாளங்கள் பாதிக்கப்படக்கூடும் எனவும், பாரம்பரிய அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




