மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட திடீர் போர் சூழ்நிலை காரணமாக வான்வெளி மூடப்பட்ட நிலையில், ஒரு மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் வானில் சுற்றித்திரிந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இரண்டு விமானங்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் கூட்டுத்தாபன தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்ததாவது, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து குவைத் மற்றும் தம்மாம் நோக்கி பயணித்த இரண்டு விமானங்களும் வான்வெளி மூடப்பட்டதன் காரணமாக அந்த பிராந்தியத்திற்கு அருகிலுள்ள வான்பரப்பில் சுற்றிவந்ததாகும்.
பின்னர் விமானிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் குறித்த விமானங்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதுடன், இன்று (15) காலை அவை மீண்டும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூ.எல்.-229 விமானம் நேற்று (14) மாலை 5.10 மணிக்கு குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கும், யூ.எல்.-253 விமானம் இரவு 6.36 மணிக்கு தம்மாம் சர்வதேச விமான நிலையத்திற்கும் கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்டன.
இந்த இரண்டு விமானங்களும் ஏ-321 நியோ (A321neo) வகையைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.




