இலங்கையில் விற்பனை செய்யப்படும் அனைத்து பதப்படுத்தப்பட்ட திரவ பாலுக்கும் அனுமதிக்கப்படும் அதிகபட்ச அஃப்லாடாக்சின் (Aflatoxin) அளவை நிர்ணயிக்கும் புதிய ஒழுங்குவிதியை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) அறிமுகப்படுத்தியுள்ளது.
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 12(2) ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2027 ஜனவரி 8 முதல் அமலுக்கு வரும்.
புதிய விதிமுறையின்படி, நிர்ணயிக்கப்பட்ட அஃப்லாடாக்சின் அளவை மீறும் பதப்படுத்தப்பட்ட திரவ பாலை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல் அல்லது விநியோகித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த விதி உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், பொதியிடுவோர், விநியோகத்தாரர்கள், களஞ்சிய உரிமையாளர்கள், போக்குவரத்தாளர்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உள்ளிட்ட முழு விநியோகச் சங்கிலிக்கும் பொருந்தும்.
வர்த்தமானி அறிவிப்பின்படி, பதப்படுத்தப்பட்ட திரவ பாலில் அனுமதிக்கப்படும் அதிகபட்ச அஃப்லாடாக்சின் அளவு 0.5 µg/kg (0.5 ppb) ஆகும். இது இலங்கை தரநிலைகள் நிறுவனம் (SLSI) வெளியிட்டுள்ள SLS 1815 தரநிலைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2027 ஜனவரி 8 முதல் இந்த ஒழுங்குவிதி கட்டாயமாக அமல்படுத்தப்படுவதால், திரவ பால் விநியோகச் சங்கிலியில் உள்ள அனைத்து தரப்பினரும் இந்த தரநிலைகளை கடைப்பிடிக்க வேண்டும் என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
