முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
வணிகம்

2026/27 பெரும்போக நெல் பயிர்ச்செய்கைக்கு கால அட்டவணை

2026/27 பெரும்போகப் பருவத்தில் நெல் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணை ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. கிடைக்கப்பெறும் நீர் வளங்களைத் திறம்பட முகாமைத்துவம் செய்யும் நோக்கில், பிராந்தியங்களுக்கு…

By Site Administrator2 நிமிட வாசிப்பு
2026/27 பெரும்போக நெல் பயிர்ச்செய்கைக்கு கால அட்டவணை

2026/27 பெரும்போகப் பருவத்தில் நெல் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணை ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெறும் நீர் வளங்களைத் திறம்பட முகாமைத்துவம் செய்யும் நோக்கில், பிராந்தியங்களுக்கு ஏற்ப பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க வேண்டிய திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளன.

இதன்படி, வலவ வலயத்தில் ஒக்டோபர் 01ஆம் திகதியும், அல்லை வலயத்தில் ஒக்டோபர் 15ஆம் திகதியும் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், கவுடுல்ல வலயத்தில் நவம்பர் 01ஆம் திகதியும், எலஹெர வலயத்தில் நவம்பர் 10ஆம் திகதியும் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் இலங்கையில் குறைந்தளவிலான மழைவீழ்ச்சியே எதிர்பார்க்கப்படுவதால், நீரை அதிகபட்சமாக முகாமைத்துவம் செய்வதற்காக ஒக்டோபர் மாத ஆரம்பத்திலேயே நெல் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமானது என நீர் முகாமைத்துவ செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, எல் நினோ நிலைமையுடன் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்கள் விவசாயத்துறையைப் பாதிக்கக்கூடும் என்பதால், அதனைக் கருத்திற்கொண்டு விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிடுவதன் முக்கியத்துவத்தையும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் பெரும்போகப் பருவத்தில் நெல் பயிர்ச்செய்கைக்குத் தேவையான அளவு உரம் கையிருப்பில் உள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. நாட்டுக்குத் தேவையான அளவு விதை நெல் கையிருப்பில் உள்ளதாக விவசாயத் திணைக்களமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இம்முறை பெரும்போகப் பருவத்தில் 800,000 ஹெக்டேயர் பரப்பளவில் நெல் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

தொழில்நுட்பப் பரிந்துரைகளுக்கு அமைவாக உரிய நேரத்தில் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதன் முக்கியத்துவத்தை விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த வலியுறுத்தியுள்ளார்.

விவசாயத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பப் பொதிகளைப் பின்பற்றுவதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பதுடன், அது தொடர்பில் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2026/27 பெரும்போகப் பருவ பயிர்ச்செய்கை நடவடிக்கைகளைத் திட்டமிடுவது தொடர்பான இந்த ஆரம்ப கலந்துரையாடல் அமைச்சர் கே.டி. லால் காந்த தலைமையில் நேற்று (08) கொவிஜன மந்திரயாவில் நடைபெற்றது.

வளிமண்டலவியல் திணைக்களம், நீர் முகாமைத்துவ செயலகம், நீர்ப்பாசனத் திணைக்களம், இலங்கை மகாவலி அதிகாரசபை, விவசாயத் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் தேசிய உர செயலகம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்ததாவது, இது ஆரம்பகட்ட கலந்துரையாடல் என்பதுடன், முன்மொழிவுகள் தொடர்பான இறுதித் தீர்மானம் செப்டம்பர் 18ஆம் திகதி கன்னொருவையில் நடைபெறவுள்ள இறுதிக் கலந்துரையாடலின் போது எடுக்கப்படவுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்