அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 10 மெகாவாட் மற்றும் 40 மெகாவாட் மணித்தியால திறன் கொண்ட மின்கல மின்சக்தி சேமிப்பு அமைப்பு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (18) காலை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அதிகரிப்பதுடன், தேசிய மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் ஸ்டோர்எக்ஸ் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இந்த மின்சக்தி சேமிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
பகல் நேரத்தில் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான சூரிய மின்சாரத்தை சேமித்து, இரவு நேரங்களில் மின்சாரத் தேவை அதிகரிக்கும் போது அதனை தேசிய மின்கட்டமைப்புக்கு வழங்குவது இந்த தொழில்நுட்பத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஸ்டோர்எக்ஸ் நிறுவனத்தின் முழுமையான திட்டத்தின் கீழ், 130 மெகாவாட் மற்றும் 520 மெகாவாட் மணித்தியால மொத்த திறன் கொண்ட 13 மின்சக்தி சேமிப்பு அமைப்புகளை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் முதலாவது அமைப்பு அனுராதபுரத்தில் இன்று இணைக்கப்பட்டது.
ஏனைய திட்டங்களும் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட்டு தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகல் நேரத்தில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் சூரிய மின்சாரத்தை சேமித்து பயன்படுத்துவதன் மூலம், இரவு நேரங்களில் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான அதிக செலவைக் குறைக்க முடியும் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். மேலும், 400, 250 மற்றும் 150 மெகாவாட் திறன் கொண்ட மேலதிக மின்கல சேமிப்பு திட்டங்களுக்கான கேள்விப்பத்திர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரித்தல், மின்சார உற்பத்திச் செலவைக் குறைத்தல் மற்றும் திறமையான, நம்பகமான தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு இந்த திட்டம் உதவும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




