நாட்டின் ஈர வலயத்தில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தில் பிரச்சினை இல்லையெனினும், வறண்ட வலயத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்கொள்ளளவு வேகமாக குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்ததன்படி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, மொனராகலை, மன்னார் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில நீர்த்தேக்கங்களின் நீர்கொள்ளளவு தற்போது 30 சதவீதத்திற்கும் குறைவாகியுள்ளது.
நாட்டின் 74 பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்கொள்ளளவும் 36 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் வறட்சியான காலநிலை நிலவினாலும், இந்த ஆண்டு நிலவும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிக வெப்பநிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் வேகமாக ஆவியாகுவதும் நீர் பற்றாக்குறைக்கு காரணமாகியுள்ளது.
கடுமையான வறட்சி நிலவும் பகுதிகளில் குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளுக்காக நீரை ஒதுக்க வேண்டியிருப்பதால், விவசாய நடவடிக்கைகளுக்கு நீரை வெளியிடுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்தார்.
குடிநீர் விநியோகம் இதுவரை மட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும், சில பகுதிகளில் விவசாயத்திற்காக வெளியிடப்படும் நீரின் அளவை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், எல் நினோ தாக்கத்தால் 7 மாவட்டங்களில் உள்ள 23 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையால் 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பம் மற்றும் வறண்ட காலநிலை காரணமாக காட்டுத்தீ வேகமாகப் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்ப்பாசனப் பணிப்பாளர் வலியுறுத்தினார்.




