மொனராகல, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
வெல்லவாய - மொனராகல வீதியின் கும்புக்கன கறுப்புப் பாலத்தில் வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம் எதிர்திசையில் வந்த டிராக்டர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது டிராக்டரில் பயணித்த 10 பேரில் எட்டு பேர் படுகாயமடைந்து மொனராகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடையவர்களெனவும், அவர்கள் தொடங்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த ஏனைய மூன்று பேரும் தற்போது மொனராகல வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் மற்றும் டிராக்டர் வாகனங்களின் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மொனராகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




