பிரபல இலங்கைப் பாடகி கலாநிதி நந்தா மாலினியின் மறைவை முன்னிட்டு ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களும் தேசிய துக்க தினங்களாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
மறைந்த நந்தா மாலினியின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று (21) காலை 10.00 மணி முதல் நாளை (22) பிற்பகல் 3.30 மணி வரை நுகேகொட, நாவல வீதி, இலக்கம் 30, விஜயபா மாவத்தையில் அமைந்துள்ள “நந்தா மாலினி இசை ஆசிரமத்தில்” வைக்கப்படவுள்ளது.
அவரது இறுதிக் கிரியைகள் நாளை (22) பிற்பகல் 5.00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.
இலங்கையின் முன்னணி பாடகியான நந்தா மாலினி நேற்று (20) தனது 82ஆவது வயதில் நாவலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது X கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு நந்தா மாலினியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் நந்தா மாலினியை “எமது காலத்தின் உண்மையான இசை புராணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நந்தா மாலினியின் காலத்தால் அழியாத இசை இளம் தலைமுறையினர் முதல் முதியவர்கள் வரை அனைவரது உள்ளங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவரது சிறந்த இசைப் பாரம்பரியம் இலட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.




