எந்தவொரு இறக்குமதியையும் மேற்கொள்ளாமல் சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் பாரிய மோசடி தொடர்பான விசாரணைகள், பேலியகொட பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில் பெருந்தொகையான பணம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ மெதவத்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு தெரிவிக்கையில், வழமையான பொலிஸ் சோதனையின்போது முச்சக்கர வண்டியொன்றில் பல இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இந்த பாரிய மோசடி தொடர்பான தகவல்களை வெளிக்கொணர முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து வங்கி முறைமை ஊடாக பெருமளவு பணம் வெளிநாட்டு கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ள போதிலும், அதற்குப் பதிலாக எந்தவொரு பொருளும் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசாரணை ஆரம்பத்தில் மேல் மாகாண குற்றப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டதுடன், பின்னர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (CCIB) ஒப்படைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு வங்கி முகாமையாளர்கள் மற்றும் வர்த்தகர் ஒருவர் ஆகஸ்ட் 20ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 03ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.




