கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹெராவின் நான்காவது கும்பல் பெரஹெரா நாளை (21) நடைபெறவுள்ள நிலையில், இலங்கை பொலிஸார் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
2026 ஆகஸ்ட் 18ஆம் திகதி ஆரம்பமான கண்டி எசல பெரஹெரா மங்கள நிகழ்வு, ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நான்காவது கும்பல் பெரஹெரா ஆகஸ்ட் 21ஆம் திகதி மாலை 6.40 மணிக்கு ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து ஆரம்பித்து, தலதா வீதி, கொட்டுகொடெல்ல வீதி மற்றும் ராஜ வீதி வழியாகச் சென்று மீண்டும் தலதா மாளிகையை சென்றடையவுள்ளது. பெரஹெராவின் பயணப் பாதை 1 கிலோமீட்டர் 270 மீட்டர் நீளமானதாகும்.
பெரஹெரா நடைபெறும் காலப்பகுதியில் கண்டி நகரில் விசேட போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், மாற்று வீதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கட்டுகஸ்தோட்டை பகுதியிலிருந்து கண்டி நகரை நோக்கி வரும் கனரக வாகனங்கள் மஹய்யாவ சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக பொலிஸ் சந்தியை அடைந்து கண்டி நகரை நோக்கி பயணிக்க முடியும்.
கட்டுகஸ்தோட்டை பகுதியிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் டி.எஸ். சேனாநாயக்க வீதி, குறுக்கு வீதி மற்றும் யட்டிநுவர வீதி வழியாக சென்று, மீராமக்காம் பள்ளிவாசல் அருகிலிருந்து இடதுபுறமாக திரும்பி திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக பயணிக்க முடியும்.
தென்னேகும்புர மற்றும் அம்பிட்டிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் சங்கராஜ மாவத்தை வழியாக வேல்ஸ் பார்க் சந்தியை அடைந்து, அஹெலேபொல குமாரிஹாமி மாவத்தை வழியாக போகம்பர மற்றும் கண்டி புகையிரத நிலையப் பகுதிகளை சென்றடைய முடியும். அங்கிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் இடதுபுறமாகவும், நகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் வலதுபுறமாகவும் பயணிக்க முடியும்.
மேலும், கொழும்பு மற்றும் கண்டி இடையே பயணிக்கும் வாகனங்களுக்கு வில்லியம் கோபல்லவ மாவத்தை மற்றும் பழைய பேராதனை வீதியை இரு திசைகளிலும் பயன்படுத்த முடியும்.
பெரஹெரா காலத்தில் வாகனங்கள் மற்றும் பொதுமக்களை பரிசோதித்தல், பாதுகாப்பு கடமைகள், வீதி தடைகள், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகள் உள்ளிட்ட விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரஹெரா நடைபெறும் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்களும் சாரதிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.




