நெடுஞ்சாலைகளில் இடம்பெறும் வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்களைக் குறைக்கும் நோக்கில், செப்டம்பர் 19 முதல் நெடுஞ்சாலைகளில் நுழையும் அனைத்து வாகனங்களின் சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். இந்தச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் நபர்களிடமிருந்து ரூ.1,000 அபராதம் அறவிடுவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதாகவும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பேருந்துகளின் பயணிகளிடமிருந்தும் இந்த அபராதம் அறவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுல குலரத்ன, சீட் பெல்ட் இல்லாத வாகனங்களில் அவற்றைப் பொருத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலமும் செப்டம்பர் 19ஆம் திகதியுடன் நிறைவடையும் எனத் தெரிவித்தார்.
2025 செப்டம்பர் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட 2455/29 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.




