சட்டவிரோதமான முறையில் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் நபர் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று (18) மாலை வெல்லவீதி பொலிஸ் பிரிவில் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, 10,467,000 ரூபாய் பணத்தை சட்டபூர்வமாகப் பெற்றுக்கொண்ட விதம் தொடர்பில் உறுதிப்படுத்த முடியாத நிலையில், சந்தேகநபர் ஒருவர் பணச் சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபரிடமிருந்து போலியான 1,000 ரூபாய் நாணயத்தாளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 19 வயதுடைய கொழும்பு 05 பகுதியைச் சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




