இலங்கையிலிருந்து தப்பிச் சென்று ஓமானில் தலைமறைவாகியிருந்த, சிவப்பு அறிவிப்பு (Red Notice) பிறப்பிக்கப்பட்ட 28 வயதுடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று (18) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபருக்கு எதிராக, ‘கணேமுல்ல சஞ்சீவ’ என அழைக்கப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலைக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியமை, மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற மனிதக் கொலைக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியமை மற்றும் உயிருள்ள கைக்குண்டை வைத்திருந்தமை தொடர்பில் குற்றச்சாட்டுகள் உள்ளன.
மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.




