
கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹெரா மஹோற்சவத்தின் முதல் கும்பல் பெரஹெரா நாளை (18) நடைபெறவுள்ள நிலையில், கண்டி நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டத்தை அமுல்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2026 ஆகஸ்ட் 18ஆம் திகதி மாலை 6.52 மணிக்கு ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து ஆரம்பமாகும் முதல் கும்பல் பெரஹெரா, தலதா வீதி, கொழும்பு வீதி, யட்டிநுவர வீதி மற்றும் ராஜ வீதி வழியாகச் சென்று மீண்டும் ஸ்ரீ தலதா மாளிகையை வந்தடையவுள்ளது. பெரஹெரா செல்லும் பாதையின் மொத்த தூரம் 1.65 கிலோமீற்றர் ஆகும்.
பெரஹெரா நடைபெறும் காலப்பகுதியில் வீதித் தடைகள், பாதுகாப்பு பணிகள், வாகனங்கள் மற்றும் நபர்களைச் சோதனை செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகனத் தரிப்பிட வசதிகள் உள்ளிட்ட விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கட்டுகஸ்தோட்டையிலிருந்து கண்டி நகரை நோக்கி வரும் கனரக வாகனங்கள் மஹய்யாவ சந்தியில் இருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக பொலிஸ் சந்தியை கடந்து நகரை சென்றடைய முடியும். இலகுரக வாகனங்கள் டி.எஸ். சேனாநாயக்க வீதி, குறுக்கு வீதி மற்றும் யட்டிநுவர வீதி உள்ளிட்ட மாற்று வீதிகளைப் பயன்படுத்த முடியும்.
தென்னேகும்புர மற்றும் அம்பிட்டிய பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் சங்கராஜ மாவத்தை, வேல்ஸ் பார்க் சந்தி மற்றும் எஹலேபொல குமாரிஹாமி மாவத்தை வழியாக பயணிக்க முடியும். மேலும், ராஜபிஹில்ல மாவத்தை சந்தியிலிருந்து பள்ளிய வீதி வழியாக கண்டி நகருக்குள் நுழைய முடியும்.
கண்டி நகரிலிருந்து அம்பிட்டிய மற்றும் தெல்தெனிய பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் தலதா வீதி மற்றும் சங்கராஜ மாவத்தை வழியாக மாற்று பாதைகளைப் பயன்படுத்த முடியும். கொழும்பிலிருந்து கண்டி நகருக்குள் வருவதற்கும், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி வெளியேறுவதற்கும் வில்லியம் கோபல்லவ மாவத்தை மற்றும் பழைய பேராதனை வீதி ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும்.
கண்டி எசல பெரஹெரா மஹோற்சவம் ஆகஸ்ட் 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதால், அந்தக் காலப்பகுதியில் தினசரி போக்குவரத்து திட்டங்களும் பொலிஸாரால் அமுல்படுத்தப்படவுள்ளன.
அவசர தொடர்புகளுக்கு: 081 223 3333 / 071 859 1045
மூலம்: பொலிஸ் ஊடகப் பிரிவு




