தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதைய வறட்சியான காலநிலை முடிவடைந்து போதுமான மழையை எதிர்பார்க்க முடிவது ஒக்டோபர் மாதத்திலேயே என வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும் மொனராகலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வெளியில் நடமாடும்போது இலகுவான ஆடைகளை அணியுமாறும், அவ்வப்போது ஓய்வெடுத்து முடிந்தவரை அதிகளவு நீரைப் பருகுமாறும் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, தென்மேற்கு பருவமழை தற்போது நாட்டில் நிலவி வந்தாலும், அடுத்த சில நாட்களில் ஒட்டுமொத்தமாக மழைவீழ்ச்சி குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இன்று (13) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30–40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் செப்டெம்பர் மாதம் வரை தொடர்ந்தும் வறட்சியான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே முதல் செப்டெம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இப்பகுதிகளில் குறைந்த மழைவீழ்ச்சி பதிவாவது வழக்கமானதாக இருந்தாலும், எல் நினோ நிலைமை காரணமாக அது மேலும் தீவிரமடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை எல் நினோ நிலைமையின் உச்ச தாக்கம் தென்படவில்லை என்றாலும், ஆகஸ்ட் மாதத்துடன் அதன் வளர்ச்சியை அவதானிக்க முடியும் என மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்குள் எல் நினோ நிலைமை வலுவான நிலையை அடைவதற்கான வாய்ப்பு 80 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும், அதன் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என்றாலும், எல் நினோவின் தாக்கம் காரணமாக அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மீண்டும் மழைவீழ்ச்சி குறைவடையும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.




