கொழும்பு, பொரளை மகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட சிறைச்சாலை அதிகாரி ஒருவர் 2 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸ்ஸ பிரிவின் குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின்போது சந்தேகநபரிடமிருந்து 100 கிராம் ஐஸ் எனப்படும் கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் மற்றும் 20 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
தெஹிவளை பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய ஒருவர் போதைப்பொருட்களுடன் கல்கிஸ்ஸ பகுதியில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணைகளின்போது, மகசின் சிறைச்சாலையில் தற்போது தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரிடமிருந்து வாட்ஸ்அப் அழைப்பு மூலம் கிடைத்த இடத்திற்குச் சென்று போதைப்பொருள் பொதியைப் பெற்றுக்கொண்டதாக முதலாவது சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
இந்த போதைப்பொருள் பொதியை பொரளை, வனாத வீதி பகுதியில் மற்றொரு நபரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிஸ்ஸ பிரிவின் குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிலந்த கமகே தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்தில் இரகசிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சிறைச்சாலை விளையாட்டு உடையில் வந்த குறித்த சிறைச்சாலை அதிகாரி, முதலாவது சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருள் பொதியை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அதிகாரி தங்காலை, பெலியத்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த ஜனவரி மாதம் மகசின் சிறைச்சாலைக்கு இணைக்கப்பட்டதுடன், அதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பில் கல்கிஸ்ஸ பிரிவின் குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.




