கிராம உத்தியோகத்தர்களின் எரிபொருள் கொடுப்பனவு உள்ளிட்ட தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களில் அவர்களின் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டதாகவும், ஜனாதிபதி, அமைச்சின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர், அவற்றை எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாகத் தீர்ப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், எரிபொருள் கொடுப்பனவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு நேற்று (10) மற்றும் இன்று (11) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இதன் காரணமாக சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களுக்கு சென்ற பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், தமது பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனத் தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக கொடுப்பனவு வழங்கப்படும் வரை தற்காலிக கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லாவிட்டால், கிராம உத்தியோகத்தர்களின் களப்பணிகளை மட்டுப்படுத்துவதற்கான சுற்றறிக்கையை வெளியிட முடியும் எனவும், இதற்கான தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




