கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதிப் பீடத்தின் பீடாதிபதி உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து 50 இலட்சம் ரூபா நஷ்டஈடு பெற்றுத்தருமாறு கோரி சஹான் குமார அதுகோரள என்ற மாணவர் நுகேகொட மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் மற்றொரு மாணவர் மூலம் தன்னிடம் 80,000 ரூபா பணம் கோரியதாகவும், அதனை வழங்க மறுத்ததால் தன்னை பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையில் தோல்வியடையச் செய்ததாகவும் மாணவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு முதலில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் பின்னர் மீண்டும் எந்தவொரு பரீட்சையும் நடத்தப்படாமல் சித்தியடைந்ததாக அறிவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் தோல்வியடைந்த மாணவர்கள் மீண்டும் பரீட்சைக்கு உட்படுத்தப்படாமல் எவ்வாறு சித்தியடைந்தனர் என அதிகாரிகளிடம் கேட்டபோதும், அது தொடர்பில் இதுவரை தனக்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை எனவும் மாணவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், பரீட்சை முறைகேடுகள் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவதாகவும் அவர் தனது மனுவில் நீதிமன்றத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதிப் பீடத்தினால் நடத்தப்பட்ட தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிக முகாமைத்துவ உயர் டிப்ளோமா பாடநெறியை (2022/2023) பயின்ற குறித்த மாணவர், சட்டத்தரணி தனோஷா பெரேரா ஊடாக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.




