சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
வாலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் பிரிவின் அதிகாரிகள், மலேசிய பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட நடவடிக்கையில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று (10) மாலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேகநபர் 41 வயதுடைய ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் பேராதனை மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளிலும் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
2014ஆம் ஆண்டு பேராதனை பொலிஸ் பிரிவில் துப்பாக்கிகளை காண்பித்து ஒருவரை கடத்திச் சென்று தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் 2016ஆம் ஆண்டு அதே பொலிஸ் பிரிவில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை தொடர்பான இரண்டு வழக்குகளில் அவர் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபராக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவருக்கு எதிராக திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், 2003ஆம் ஆண்டு கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பிலும் அவர் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டிலும் கல்கிஸ்ஸ பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேகநபர் மலேசியாவில் கைது செய்யப்பட்டபோது அவருடன் இருந்த ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரும் கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனை மற்றும் நேரடி மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.




