உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிங்களத் திரைப்படமொன்றை சட்டவிரோதமாக சமூக ஊடகங்களில் வெளியிட்டமை தொடர்பில் மொரட்டுவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளர் ஜனித மாரசிங்கவின் திரைப்படமொன்றை Facebook மற்றும் Telegram ஊடாக பகிர்ந்த நபருக்கு எதிராக திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஸித் ஜினசேன, இவ்வாறான திரைப்படங்களை சட்டவிரோதமாக பகிர்வது சிறிய அளவிலான சட்ட மீறல் அல்ல எனவும், அது பாரதூரமான குற்றமாகும் எனவும் தெரிவித்தார்.
சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டால், இதனால் ஏற்பட்டுள்ள நிதி இழப்பை சம்பந்தப்பட்ட குற்றவாளியிடமிருந்து அறவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கொரளவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பாடசாலை மாணவர் என தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இரு தரப்பினரின் பரஸ்பர இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த மாணவரை கடுமையாக எச்சரித்து சம்பவத்தை சமரசமாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான திரைப்படங்களை சட்டவிரோதமாக பகிர்வதைத் தடுப்பதற்கும், அதற்கு எதிரான சட்டங்களை மேலும் வலுப்படுத்தி கடுமையாக அமுல்படுத்துவதற்கும் தமது சங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.




