வெலிகம, பரண கடே கடற்கரையில் கரையொதுங்கிய 21 வயதான வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை பிற்பகல், துனிசிய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று பரண கடே கடற்கரையில் surfing விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது குறித்த சுற்றுலாப் பயணி காணாமல் போயுள்ளார்.
திடீரென ஏற்பட்ட பலத்த காற்றுடன் உருவான கடுமையான நீரோட்டத்தில் சிக்கி, 21 வயதான சுற்றுலாப் பயணி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர், கடலோர பாதுகாப்புப் படையினர் மற்றும் தனியார் நீர்மூழ்கிக் கப்பல் வீரர்கள் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். எனினும், கடலில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தேடுதல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டது.
எவ்வாறாயினும், நேற்று காலை குறித்த சுற்றுலாப் பயணியின் சடலம் அதே கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தேடுதல் மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகள் நிறைவுசெய்யப்பட்டன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




