ரத்மலான பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கல்கிசை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2026 ஆகஸ்ட் 5ஆம் திகதி கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மலான பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதன்படி, ஆகஸ்ட் 8ஆம் திகதி மாலை மொரட்டுவ மற்றும் ரத்மலான பகுதிகளில் கல்கிசை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட நடவடிக்கையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21, 26, 28 மற்றும் 30 வயதுடைய மொரட்டுவ மற்றும் ரத்மலான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் வழிநடத்தலின் பேரில் இந்தக் குற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான முரண்பாடே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




