முன்மொழியப்பட்டுள்ள விலங்கு நலன்புரி சட்டமூலத்தினால் கண்டி எசல பெரஹராவுக்கோ அல்லது நாட்டின் வேறு எந்த பாரம்பரிய கலாசார நிகழ்வுகளுக்கோ பாதிப்பு ஏற்படும் என பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என மத்திய மாகாண ஆளுநர் வைத்தியர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தமது பதவியை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் கருத்து தெரிவித்த ஆளுநர், விலங்கு நலன்புரி சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்தாலும், அதன் ஏற்பாடுகள் ஊடாக கலாசார நிகழ்வுகளுக்கு எந்தவிதத்திலும் இடையூறு ஏற்படுத்தும் நோக்கம் இல்லை என தெரிவித்தார்.
விலங்கு நலன்புரி சட்டமூலத்தில் யானைகள் உள்ளிட்ட விலங்குகள் தொடர்பில் விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், கண்டி எசல பெரஹரா போன்ற புனிதமான கலாசார விழாக்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
எதிர்மறையான கருத்துகளைக் கொண்ட சில குழுக்கள் பரப்பும் கருத்துகளின் அடிப்படையில் இந்த சட்டமூலம் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளவோ பிரச்சினைகளை உருவாக்கிக்கொள்ளவோ தேவையில்லை எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
கண்டி எசல பெரஹரா உலகப் புகழ்பெற்ற கலாசார விழாவாகும் எனவும், அதன் எந்தவொரு பாரம்பரிய அம்சத்தையும் குறைக்கவோ அதற்கு பாதிப்பு ஏற்படுத்தவோ இடமளிக்கப்படாது எனவும் ஆளுநர் உறுதியளித்தார்.
விலங்குகளின் நலனை உறுதி செய்வதுடன், நாட்டின் கலாசார விழாக்களை பாதுகாத்து அவற்றை மேலும் வளர்ப்பதற்கும் இந்த சட்டமூலம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.




