பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் விசேட விதிமுறைகளை அறிமுகப்படுத்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம், புதிய திருத்தங்கள் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் ஒலி மாசுபாடு தொடர்பில் குற்றம் சாட்டப்படும் நபர்களை பிடியாணையின்றி கைது செய்வதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
புதிய விதிமுறைகளின் கீழ், நிர்ணயிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள், வாகனங்கள் அல்லது வேறு உபகரணங்களைப் பயன்படுத்தும் நபர்களை பிடியாணையின்றி கைது செய்வதற்கு சட்ட ரீதியான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
மேலும், ஒலி மாசுபாடு தொடர்பான குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் மற்றும் சிறைத்தண்டனைகளை எதிர்காலத்தில் கணிசமாக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
மத மற்றும் விழா நிகழ்வுகள், தொழிற்சாலைகள், இரவு நேரங்களில் நடத்தப்படும் விருந்துகள், அத்துடன் பயணிகள் போக்குவரத்து வாகனங்களில் அதிக சத்தத்துடன் இசையை ஒலிபரப்புதல் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து ஒலி மூலங்களையும் ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஒலி மாசுபாட்டினால் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலின் சமநிலைக்கும் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதே இந்த புதிய நடவடிக்கையின் பிரதான நோக்கம் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.




