பொரளை மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு சுவருக்கு மேலாக வீசி போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை வழங்க முயன்ற சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்லைன் வீதியில் அமைந்துள்ள மகசின் சிறைச்சாலையின் இடைச் சுவருக்கு அருகில் இன்று (08) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை வளாகத்தை நோக்கி பொதிகள் இரண்டை வீச முயன்றபோது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பொதிகளை சோதனையிட்டபோது 22 கிராம் 250 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், 02 மில்லிகிராம் ஹாஷ், 250 கிராம் புகையிலை, இரண்டு சிறிய கையடக்கத் தொலைபேசிகள், இரண்டு தொலைபேசி சார்ஜர்கள், 10 லைட்டர்கள் மற்றும் இரண்டு ஜோடி காதணிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 29 வயதுடைய கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நாளை (09) மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




