கனடாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி மூன்று இலங்கையர்களை எத்தியோப்பியாவுக்கு அனுப்பி, அங்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினரால் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனிதக் கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளில், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த 25, 26 மற்றும் 27 வயதுடைய மூன்று நபர்கள், டுபாய் ஊடாக எத்தியோப்பியாவுக்கு அனுப்பப்பட்டு பின்னர் கனடாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
விமானப் பயணச்சீட்டுகள் மற்றும் விசாக்களை பெற்றுக்கொடுப்பதாக கூறி சந்தேகநபர் இவர்களிடமிருந்து சுமார் 64 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளதாகவும், கனடா சென்ற பின்னர் ஒவ்வொருவரிடமிருந்தும் 100 இலட்சம் ரூபாய் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், எத்தியோப்பியாவுக்கு சென்ற பின்னர் குறித்த மூவரும் அந்நாட்டில் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினரால் கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுவிப்பதற்காக ஒருவருக்கு 30,000 அமெரிக்க டொலர்கள் கப்பமாக கோரப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மூலம் சுமார் 200 இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் அடிப்படையில் கிளிநொச்சியைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எத்தியோப்பிய அதிகாரிகள் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்களையும் மீட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பாகிஸ்தான் பிரஜைகளையும் ஒரு எத்தியோப்பிய பிரஜையையும் கைது செய்துள்ளனர்.
எத்தியோப்பியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளின் விசாரணைகளுக்குப் பின்னர், மூன்று இலங்கையர்களையும் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கும் எத்தியோப்பியாவில் செயற்படும் குற்றக் குழுக்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.




