நாட்டின் மேலும் ஐந்து சிறைகளில் மோதல்களை ஏற்படுத்தி பெரும் குழப்ப நிலையை உருவாக்க திட்டமிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று தொடர்பான தகவல்களை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக ‘திவயின’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, நீர்கொழும்பு மற்றும் மகர சிறைகளில் இடம்பெற்ற மோதல்களின் பின்னணியிலும் இதே குழு செயல்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புலனாய்வு தகவல்களின்படி, தும்பர, களுத்துறை, காலி, கொழும்பு மெகசின் மற்றும் வெலிக்கடை பெண்கள் சிறைகளில் மோதல்களை ஏற்படுத்தும் திட்டங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைகளில் குழப்பங்களை ஏற்படுத்தி நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் இந்தத் திட்டத்தின் பின்னணியில் சில அரசியல்வாதிகள், சிறைச்சாலை உயர் அதிகாரிகள் மற்றும் சிறைகளில் உள்ள சில கைதிகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரிவான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலினால் அங்குள்ள சொத்துக்களுக்கு 150 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த மோதலுக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் அனைத்து சிறைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




