பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தைகள் நடமாடும் அபாயம் அதிகரித்துள்ளதால், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்காக விசேட பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
விவசாய மற்றும் கால்நடை பண்ணைக்கு சொந்தமான கன்றுக்குட்டி ஒன்று ஜூலை 30 ஆம் திகதி அதிகாலை சிறுத்தை தாக்குதலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹந்தானை வனப்பகுதியில் வாழும் சிறுத்தைகள் அவ்வப்போது பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதாகவும், இதற்கு முன்னரும் கால்நடை பண்ணை பகுதியில் விலங்குகள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் வெளியிட்ட அறிவிப்பில், அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் பயணிக்கும் போது மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இரவு அல்லது அதிகாலை நேரங்களில் தனியாக பயணிக்க வேண்டாம் எனவும், சிறுத்தைகள் அல்லது வேறு வன விலங்குகளை கண்டால் அவற்றை அணுகவோ புகைப்படம் அல்லது காணொளி எடுக்க முயற்சிக்கவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறுத்தைகள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவுக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




