ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது அவர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இருதரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் தகவலின்படி, கடற்படை கப்பல்களில் பயன்படுத்தப்படும் ‘யூனிகோன்’ (Unico) தொடர்பாடல் அன்டெனா அமைப்பை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட பாதுகாப்பு உபகரண ஒத்துழைப்பு தொடர்பில் இரு தரப்பினரும் கவனம் செலுத்தவுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் பதவியேற்ற பின்னர் கொய்சுமி இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.
அண்மையில் நடைபெற்ற ஜப்பான்-இந்திய உச்சி மாநாட்டில் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஜப்பான் சுய பாதுகாப்புப் படை (SDF) மற்றும் இந்திய ஆயுதப் படைகளுக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்துவது குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடவுள்ளனர்.
மேலும், சீனாவின் நடவடிக்கைகள் உள்ளிட்ட இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பிலும் இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

