அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் 50 முதல் 60 சதவீதமான எழுத்தாளர்கள் வேறு தொழில்களுக்கு மாறியுள்ளதாக இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், சுமார் 40 சதவீதமான புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் தற்போது இத்துறையிலிருந்து விலகியுள்ளதாகவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு முதன்முறையாக விதிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூகப் பாதுகாப்பு வரி காரணமாக புத்தகங்களின் விலை அதிகரித்து விற்பனை குறைந்துள்ளமை இதற்கான முக்கிய காரணமாகும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலக நாடுகளில் சுமார் 95 சதவீதமான நாடுகளிலும், ஆசியாவில் எந்தவொரு நாட்டிலும் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு வரி அறவிடப்படுவதில்லை என புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள VAT உள்ளிட்ட வரிகளை உடனடியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் காமினி மொரகொட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வரி தொடர்ந்து அமுலில் இருந்தால் நாட்டின் எழுத்துத் துறையும் வாசிப்பு கலாசாரமும் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், புத்தகங்களுக்கான வரிகளை நீக்குவது தொடர்பில் அதிகாரிகளுடன் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியுள்ளதாகவும், கடந்த புத்தகக் கண்காட்சியின் போது இது தொடர்பாக கையெழுத்துப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்ததாகவும் காமினி மொரகொட தெரிவித்துள்ளார்.




