செம்மணி கூட்டுப் புதைகுழியில் இருந்து இதுவரை 565 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அகழ்வுப் பணிகள் தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, திங்கட்கிழமை (17) மேலும் 8 எலும்புக்கூடுகளும் ஒரு எலும்புத் துண்டும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதன்படி, இதுவரை கண்டெடுக்கப்பட்ட மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 565 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் 45 எலும்புத் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதைய அகழ்வுப் பணிகளின் கட்டம் ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என்றும், கண்டெடுக்கப்படும் அனைத்து விடயங்களும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
அகழ்வுப் பகுதியில் இருந்து வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, ஆடைகளின்றி புதைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான சாட்சியங்கள் தென்படுவதாக ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், அப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள மேலும் சில சடலங்கள் தொடர்பான இடங்களை அடையாளம் காண முடியும் எனத் தெரிவித்த குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் இருந்து தகவல்களைப் பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும், பொருத்தமான சந்தர்ப்பத்தில் சாட்சியாளர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதற்கு கடமைப்பட்டுள்ளதாக வலியுறுத்திய அமைச்சர், செம்மணி இடம் தொடர்பான அனைத்து உண்மைகளையும் பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படுத்துவது அவசியம் என்றும் தெரிவித்தார்.




