பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, முன் விசாரணை மாநாட்டிற்காக ஆகஸ்ட் 31ஆம் திகதி அழைக்கப்படவுள்ளது.
இந்த வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அரச சட்டத்தரணி ஒஸ்வல்ட் பெரேரா, வழக்கை முன் விசாரணை மாநாட்டிற்காக ஒரு திகதியில் அழைக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இவ்வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் தொடர்பில் முறைப்பாட்டுத் தரப்பின் நிலைப்பாடு மற்றும் குற்றப்பத்திரிகையில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் அன்றைய தினம் அறிவிக்க எதிர்பார்ப்பதாக அரச சட்டத்தரணி தெரிவித்தார்.
சுமார் 59 மில்லியன் ரூபாய் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணத்தை வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ததன் மூலம் பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக குற்றஞ்சாட்டி சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

