பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை (VAT) நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இதற்கான திட்டங்கள் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நொச்சியாகம பகுதியில் நேற்று நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வரும் நிலையிலேயே அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். தற்போது பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ள போதிலும், பொருளாதார சுயாதீனத்தை இன்னும் அடையவில்லை.
பொருளாதார சுயாதீனத்தை அடைவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரத் துறைகளைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் வினைத்திறனாக்குவதற்கும் அடுத்தாண்டு வரவு–செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கான திட்டங்கள் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.




