வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவதற்குக் காரணமான நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ‘தொழில்நுட்பக் குறைபாடு’ தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மகா சங்கத்தினர், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரை விடுதலை செய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தொழில்நுட்பக் குறைபாடு காணப்பட்டதாகத் தொடர்புடைய நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றிலும் சரியானது எனவும் அதற்கு மதிப்பளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரருக்கு எதிராக ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் இரண்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் தொடர்பில் மன்னிப்பு வழங்குவதற்கான ஆவணங்கள் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சுக்கு அனுப்பப்பட்டு அதன் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பிரிவுக்குப் பொறுப்பான மேலதிக சிரேஷ்ட செயலாளர் இது தொடர்பில் தமக்குத் தெரியப்படுத்தியிருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட கோரிக்கை அமைச்சுக்கு அனுப்பப்படவில்லை என மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அமைச்சின் அனுமதியின்றி தமது கையொப்பம் மாத்திரம் பெறப்பட்டதாகவும், இதன் மூலம் தாம் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாக்கியசோதி சரவணமுத்துவுடன் தொடர்புடைய அரச சார்பற்ற அமைப்பின் ஊடாக சந்தியா எக்னெலிகொட சமர்ப்பித்த முறைப்பாட்டுடன் இந்தச் சட்ட நடவடிக்கை தொடர்புபட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போதைய ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளால் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தத் தவறினால் ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட நேர்ந்ததாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, இது தொடர்பில் மகா சங்கத்தினரிடம் எவ்வித நிபந்தனையுமின்றி மன்னிப்புக் கோரியுள்ளார்.
இணையத்திலிருந்து பெற்றுக்கொண்ட நீதிமன்றத் தீர்ப்பின் பிரதியை விரிவாக ஆராய்ந்த பின்னரே இந்த விடயங்களைக் கண்டறிந்ததாக மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.




