முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தியைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ஷ தரப்பினருக்கும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரு தரப்பினரில் ஒரு தரப்பினர், திடீர் இருதய நோய் காரணமாக மஹிந்த ராஜபக்ஷ கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை செய்தியொன்றைப் பரப்பியுள்ளனர்.
குறித்த செய்தியை வெளியிட்ட தரப்பினரிடம் மீண்டும் விசாரித்த பின்னர், Ceylonwire.lk இணையத்தளமும் அந்தச் செய்தியை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்தச் செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே, முன்னாள் ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ஷ உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், அரசியல் எதிரிகள் இத்தகைய பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் தகவல்களைப் பரப்பி, அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு மத்தியில் அவர் பலவீனமடைந்துள்ளதாகக் காட்ட முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டாலும், அவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் வலிமையான தலைவர் என்றும் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் இத்தகைய பொய்யான தகவல்களைப் பரப்புவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.




