‘சிறியலிய சவிய’ கணக்கு தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிகா பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் விசாரணை அதிகாரிகள் அவரை கைது செய்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சிராந்தி ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், குறித்த பணம் இன்னமும் சுதுவெல்ல கிளையில் அமைந்துள்ள ‘சிறியலிய சவிய’ கணக்கில் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார்.
CT ஸ்கேன் இயந்திரமொன்றை கொள்வனவு செய்வதற்காக 160 மில்லியன் ரூபாய் தேவைப்பட்ட போதிலும், 2014ஆம் ஆண்டளவில் 42 மில்லியன் ரூபாய் மாத்திரமே திரட்ட முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த கணக்கு முடக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ‘சிறியலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரான பிரதீப் காரியவசத்தை தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவருக்கு வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.




